தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்தது. ஆனால், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரை செய்த கட்டணம் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்றும் அதை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் ஏராளமான பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.
அவற்றின் மேல்முறையீட்டு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிபதி கோவிந்தராஜன், முதலமைச்சர் கருணாநிதியை நேற்று சந்தித்தார். புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார். பின்னர், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கமிட்டியின் அலுவலகத்தில் நீதிபதி கோவிந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ’’தமிழ்நாட்டில் 10,430 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 6 ஆயிரம் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ளன. அத்தனை பள்ளிகளுக்கும் கட்டணத்தை திருத்தி அமைப்பது என்பது எளிதான வேலையல்ல. அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருத்தப்பட்ட புதிய கல்விக்கட்டணம் விரைவில் வெளியிடப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் கட்டண விவரம் அனுப்பப்படும்.
புதிய கல்விக்கட்டணம் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும். இது இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்தப்படும். அரசு அறிவிக்கும் கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்பட்டிருந்தால் அந்த கட்டணம் மாணவர்களிடம் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும். குறைவான கட்டணத்தை வசூலித்திருந்தால் எஞ்சிய கட்டணத்தை மாணவர்களிடம் பள்ளிகள் வசூலித்துக்கொள்ளலாம்’’என்று தெரிவித்தார்.
நன்றி : நக்கீரன்

No comments:
Post a Comment